Tuesday, January 10, 2017

குழந்தைகளுக்கான உணவும், தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! பகுதி - 2

படித்ததில் பகிர்தந்து - நன்றி தி ஹிந்து 

பகுதி -2 பகுதி -3 பகுதி -1

ஒரு வயது குழந்தைக்கு எத்தனை வேளை உணவு ஊட்டலாம்?
1 வயது ஆனதும் காலை, 11 மணி, மதியம், 5 மணி, இரவு என 5 வேளைகளில் உணவு கொடுக்கலாம். ஒரு வயதுக்குள் கசப்பு தவிர எல்லா ருசிகளையும் குழந்தைக்குப் பழக்கலாம்.
வடை, சுண்டல், புட்டு என பண்டிகைகள் உள்ளிட்ட எந்த நாளிலும் வீட்டில் செய்யும் பலகாரங்களை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

1 வயது முடிந்ததும் 4 முறை சாப்பிடக் கொடுக்கலாம். அப்போது தனியாக பிரத்யேகமாக எந்த உணவையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் எல்லோரும் சாப்பிடும் உணவையே தாராளமாக தரலாம்.

சில பெற்றோர்கள் சாப்பிடு சாப்பிடு என்று குழந்தைகள் வாயில் திணிக்கிறார்களே. இது சரியா?
குழந்தை விரும்பி வாயில் உணவை வாங்கினால் மட்டுமே ஊட்ட வேண்டும். வாயில் திணிப்பதோ, கட்டாயப்படுத்துதோ கூடாது. அப்படி மீறிச் செய்தாலும் ஒரு பருக்கை சோற்றைக் கூட கூடுதலாகவோ, குறைவாகவோ குழந்தை சாப்பிடாது. குழந்தை போதும் போதாது என்பதை சமிக்ஞைகள், உடல்மொழி மூலம் வெளிப்படுத்திவிடும்.


குழந்தைகளுக்கு எப்படிச் சோறூட்ட வேண்டும்?
பொதுவாக குழந்தைக்கு சோறூட்டும்போது தாய் தன் கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு, குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு முகம் பார்த்து பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். குழந்தையின் கண்ணோடு கண் ஒட்டியபடி உணர்வுப்பூர்வமாக சோறூட்ட வேண்டுமே தவிர, டிவி பார்த்துக்கொண்டோ கவனத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டோ சோறூட்டக் கூடாது.

குழந்தைகளுக்குத் தராமல் தவிர்க்க வேண்டியது என்ன?
பிஸ்கெட், பிரெட்டுக்கு தடா போடுவது சிறந்தது. இவற்றில் சோடா உப்பு கலந்திருப்பதால் குழந்தையின் உடலுக்கும், குடலுக்கும் ஒத்துவராது.

டீ,காபி பழக்கத்தை குழந்தைக்குக் கொண்டு வராமல் இருக்கலாம். டீயில் உள்ள டேனின், காபியில் உள்ள கஃபின் சின்னதாய் சுறுசுறுப்பை வரவழைக்கும் என்றாலும் அது நம்மை அடிமையாக்கிவிடும். அந்த பழக்கத்தால் குழந்தைகள் சாப்பாட்டை தள்ளிப்போடும் சூழல் உருவாகும்.

விளம்பரங்களில் வரும் பானங்களை அறவே தவிர்த்திடுங்கள்.

கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களையோ டின்களில் அடைக்கப்பட்ட பவுடர் உள்ளிட்ட பொருட்களையோ கொடுப்பது குழந்தையின் செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

குழந்தையை எப்போது தானாக சாப்பிட வைக்கலாம்?
2 வயது ஆனவுடன் தாய் குழந்தைக்கு ஊட்டக் கூடாது. குழந்தையை தன் கைகளினால் சாப்பிட வைக்க வேண்டும். ஆரம்பத்தில் ஸ்பூனில் சாப்பிட எந்தக் குழந்தையும் பழகாது. அதனால் கைகளால் சாப்பிடச் சொல்லலாம். நகங்களை வெட்டி, இரு கைகளை சுத்தப்படுத்தி, குழந்தையை தானாக சாப்பிட வையுங்கள். 2 கைகளில் சாப்பிட்டாலும் தடுக்காதீர்கள்.

ஒரே மாதிரி உணவு கொடுக்கக் கூடாது. ஏன்?
குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவைக் கொடுத்தால் போரடித்துவிடும். அதனால் தினம் தினம் புதிய உணவுகளை கொடுக்க வேண்டும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு என்ற இரு காய்கறிகளையே அதிகம் தரும் பெற்றோர்கள் உண்டு. அவரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் என 15-க்கும் மேற்பட்ட காய்கறிகளை குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி சமைத்துத் தரலாம். வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் ஒரு காய்கறி உள்ளது. அதை ஒவ்வொரு நாளைக்கும் தரலாம். சில பள்ளிகள் திங்கட்கிழமை என்றால் பச்சை நிற உணவு, செவ்வாய்க்கிழமை என்றால் மஞ்சள் நிற உணவு என அட்டவணைப்படுத்தி உள்ளன. அதே போல எல்லா பெற்றோர்களும் குழந்தைகளைப் பழக்கப்படுத்தலாம்.

இது குழந்தைகளுக்கு கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதுடன், வண்ணங்களும், காய்கறிகளின் பெயர்களும் மனதில் பதிந்து நினைவாற்றலை வளர்க்க உதவும்.
  
நன்றி : ஹிந்து - தமிழ் 
தொகுப்பு: பாபு நடேசன்

No comments:

Post a Comment