Tuesday, January 10, 2017

குழந்தைகளுக்கான உணவும், தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! பகுதி - 1

படித்ததில் பகிர்தந்து - நன்றி தி ஹிந்து 
பகுதி - 1
 
எந்தக் குழந்தைக்கும் அதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களை முன்கூட்டியே தடுக்கக் கூடிய தற்காப்பு மருந்தையும், தடுப்பூசியையும் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை.
குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு வழங்காமல் இருப்பது, தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது உரிமை மீறல் செயல். இவற்றின் மீது பெற்றோருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அதற்காக குழந்தைகள் விஷயத்தில் தடுப்பு மருந்தையும், தடுப்பூசியையும் தவிர்க்கக் கூடாது.

கோட்பாடுகள், கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்தோ, மாற்று முடிவோ இருந்தாலும் அதற்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கக் கூடாது.

இதுகுறித்த விரிவான பார்வையைக் கொடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கான உணவுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் குறித்து குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் டாக்டர் என்.கங்காவிடம் பேசினோம்.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம்?
குழந்தை பிறந்து 180 நாட்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இயற்கையான குடும்ப சூழலுக்கு உகந்த நம் கலாச்சார உணவையே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். காலை உணவாக இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
காலை 11 மணி அல்லது மாலை 3 மணிக்கு ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, லெமன் ஆகியவற்றை ஆறிய வெந்நீர் மற்றும் உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து பழச்சாறாகக் கொடுக்கலாம். ஆனால், இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இளநீர், பானகம் போன்றவற்றையோ வடித்த கஞ்சியில் உப்பு அல்லது நெய் சேர்த்தோ கொடுக்கலாம்.

மதியம் சாதத்தை கரண்டி அல்லது மத்தில் மசியச் செய்து அதில் உப்பு மற்றும் வெந்நீர் கலந்து கொடுக்கலாம். ரசம், பருப்பு, சாம்பார், வேகவைத்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், எண்ணெய்ப் பொருட்கள், காரம் மிகுந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

மாலை சுமார் 5 மணிக்கு வாழைப்பழம், தோல் சீவி இட்லி தட்டில் வேகவைத்த ஆப்பிள், சப்போட்டா பழத்தின் கதுப்புப் பகுதி (சதைப் பகுதி) ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட ஐந்து தானியங்கள் அல்லது ஏழு தானியங்கள் அல்லது ஒன்பது தானியங்களை வறுத்து, அரைத்து சத்துமாவாக, கஞ்சியாக, கூழாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒவ்வொருநாளும் சுவை மாற்றத்துக்காக உப்பு, வெல்லம், பால் என சத்துமாவில் கலந்து கொடுக்கலாம்.

பழங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று சொல்லப்படுகிறதே?
பழங்கள் சாப்பிடுவதால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று பதற வேண்டாம். சளிக்கும் பழங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அறிவியல் உண்மை.

இரவு உணவை எப்போது வழங்கலாம்?
9 மாதங்களுக்குப் பிறகு இரவு உணவு வழங்கலாம். சுமார் 8 மணிக்கு இட்லி, இடியாப்பம், தோசை, சாதம் என எதுவாக இருந்தாலும் ஃபிரஷ் உணவாக இருக்க வேண்டும். காலையில் செய்து மிச்சமானது, ஃப்ரிட்ஜில் இருந்தது என இருக்கும் உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

அசைவ உணவை எப்போது கொடுக்கலாம்?
9-வது மாதம் முடிந்த பிறகு தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மைக்கான தடுப்பூசி குழந்தைக்கு போடப்படும். அதற்குப் பிறகு குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம்.( அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தைச் சார்ந்த குடும்பத்தினராக இருந்தால்)

முதல் 15 நாட்களுக்கு அவிச்ச முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே கொடுக்க வேண்டும். சிலருக்கு செரிமானம் ஆவதில் தாமதம், உப்புசம், வயிற்றுப்போக்கு என வர நேரிடும். அதற்காக முட்டை கொடுப்பதை நிறுத்தக் கூடாது. வேண்டுமென்றால் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை கொடுக்கலாம். 15 நாட்களுக்குப் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.
அதற்குப் பிறகு மீன், ஈரல், கோழிக்கறி, எலும்பு சூப் ஆகியவற்றை குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். 2 வயதுக்குப் பிறகே வேகவைத்த ஆட்டு இறைச்சியைத் தர வேண்டும். அந்த வயதில் தான் குழந்தைக்கு ஆட்டு இறைச்சி செரிமானம் ஆகும். 2 வயதுக்கு முன்பாக மட்டன் சூப் மட்டும் தரலாம்.

அசைவ உணவுக்கென்று ஒரு வாசனை உள்ளது. அந்த வாசனையை குழந்தை பழக வேண்டுமென்றால் ஒரு வயதுக்குள் அந்த ருசியை குழந்தைக்கு அறிய வைக்க வேண்டும். அப்போது பழக்காவிட்டால் குழந்தை அதற்குப் பிறகு அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

நன்றி : ஹிந்து - தமிழ் 

தொகுப்பு: பாபு நடேசன்

No comments:

Post a Comment