Tuesday, May 29, 2018

பெற்றோர்களின் கவனத்திற்கு | பள்ளி செல்லும் குழந்தைகள்

பள்ளி செல்லும் குழந்தைகளுடைய பெற்றோர்களின் கவனத்திற்கு !!

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும். இதை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் உங்களின் குழந்தைகள் நீங்கள் நினைத்ததை விட வாழ்வில் சிறந்து விளங்குவார்கள். அதற்கு சில உதாரணத்தை இங்கு பார்க்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை :

பொதுவாகவே ஒரு சில குழந்தைகள் அடம்பிடிக்காமல் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். ஆனால், சில குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். அந்த குழந்தைகளிடம், பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் ஆசிரியர் அடிப்பார்கள் என்று அவர்களை பயம் காட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு பயம்காட்டினால் ஆசிரியர்கள் நம்மை அடித்து துன்புறுத்துவார்கள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். எனவே, அவர்களின் மனதில் ஆசிரியர்களை பற்றிய தவறான எண்ணத்தை விதைக்காதீர்கள்.
மேலும், குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை அடித்து மிரட்டாமல், எந்த பாடம் புரியவில்லை என்று கேட்டு அவர்களுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களே சிறந்த வழிகாட்டி :
பெற்றோர்கள் தங்களின் சிறுவயதில் மருத்துவராகவோ, ஆசிரியராகவோ என ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டிருப்பார்கள். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் ஆசை நிறைவேறாமல் இருந்திருக்கலாம். எனவே அந்த நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் மீது திணித்து நீ மருத்துவராக வேண்டும் அல்லது நீ ஆசிரியராக வேண்டும் என்று சொல்லக்கூடாது.

உங்கள் குழந்தைகளின் ஆசையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருங்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு ஊக்குவியுங்கள்.
 
தொகுப்பு : பாபு நடேசன்

Friday, May 25, 2018

குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டை அறிந்து கொள்வது எப்படி? | 5 வயது

பொதுவாக அவர்கள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.

 ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை. 
 
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும். 

எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.

அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.

 பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
 
பதிப்பக நன்றி :மாலைமலர் 
தொகுப்பு : பாபு நடேசன்

Friday, November 24, 2017

நுண்ணறிவு பேசி (ஸ்மார்ட் போன்) யில் விளையடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும் | குழந்தை வளர்ப்பு | பாபு நடேசன்

குழந்தைகள் தான் நம் எதிர்கால தூண்கள், தூண்களை நாம் தான் சிந்தாமல் சிதறாமல் செதுக்க வேண்டும், தந்தையும் தாயும் வேலைக்கு செல்லும் இந்த அவசர உலகில் நாம் தூண்களை செதுக்குவதில் சற்று சிரமம் தான். இருபின்னும் பெற்றோரின் கடமை சிறிது நேரம் ஒதுக்கி நம் குழந்தைகளை கவனிப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

குழந்தைகளுக்குப் பெற்றோர் என்ன கற்றுத் தருகிறார்களோ, அதைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். தாங்கள் கற்றுத் தரும் விஷயம் நல்லதா, கெட்டதா என்பதைப் பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் வெங்கடரமணி.. 


தொழில்நுட்ப உலகில் நுண்ணறிவு பேசிகளை வைத்து தான் குழந்தைகளுக்கு நாம் சோறூட்ட வேண்டிய நிலைமை. நிலாக்காட்டி சோறூட்டிய காலம் போய், நிலவினை நுண்ணறிவு பேசிகளில் காட்டி சோறுட்டவேண்டிய நிலைமை தான் இன்று.

இருப்பினும் நாள் முழுக்க குழந்தைகளுக்கு நுண்ணறிவு பேசிகளை கொடுத்தால் பாதிப்பு நமக்கு தான்.

இன்றைய நுண்ணறிவு பேசிகளின் விளையாட்டுக்கள் குழந்தைகளை அடிமையாக்குவது போன்றே வடிவமைக்கபடுகிறது, விளையாட்டுகள் யாவும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியை மட்டுமே உண்டாக்குகின்றன. இது குழந்தைகளை மோசமான பாதிப்புக்குள்ளாக்கின்றான.

காணொளி விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பில் கவன குறைவு, அன்றாட செயல்களில் மாற்றம் போன்ற அடிப்படை சிக்கல்கள் அதிகரிக்கின்றன. முழுக்கவனமும் விளையாட்டை நோக்கிச் சென்று அடிமையாக்கும் முன்பு நாம் அவர்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும்.

தந்தையும் தாயும் வேலைக்கு செல்லும் இந்த அவசர உலகில் , பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.
தாத்தா, பாட்டிகளுடன் வளர்ந்த குழந்தைகள் இன்றைக்கு நுண்ணறிவு பேசிகளுடன் தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவதற்கும் அடம்பிடித்தால் சமாதானப்படுத்துவதற்கும் இரவு தூங்க வைக்கவும் தங்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கவைக்க என எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வாக நுண்ணறிவு பேசியை  பல பெற்றோர் பயன்படுத்துகிறார்கள்.


குழந்தகளின் கவனத்தை திசை திருப்ப சில உத்திகளை கவனமாக கையாள வேண்டும், 


உங்கள் குழந்தைகள் தினமும் 1  மணி நேரத்துக்கு மேல் நுண்ணறிவு பேசிகளில் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள். 

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள்.

ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கித் தருவதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். அவர்கள் அடம்பிடித்தாலும், முடியாது எனப் பெற்றோர் கண்டிப்பாக மறுக்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் முதலில் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். 

குழந்தைகளை விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும் என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். 

குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும்.

நுண்ணறிவு பேசிகளின் விளையாட்டுகளில் இருந்து விடுபட்டால் நான் பூங்கா, கடற்கரை, நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல், மிதிவண்டி போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன் என்று கூறி உங்கள் குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

நுண்ணறிவு பேசிகளின் விளையாட்டு அடிமைகளின் அறிகுறிகள் என்ன?
  • சோர்வு
  • பலகீனம்
  • பள்ளி பாடங்களில் பின்னடைவு
  • கை, கால், முதுகு, கழுத்துவலி
  • மன அழுத்தம்
  • காரணமற்ற கோபம்
  • எரிச்சல்
  • விளையாடுவதற்காக பொய் சொல்லுதல்
  • உணவு மீது விருப்பமின்மை...!
தொகுப்பு: இணைய மூலம்  | பாபு நடேசன்

Tuesday, January 10, 2017

குழந்தைகளுக்கான உணவும், தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! பகுதி - 4

படித்ததில் பகிர்தந்து - நன்றி தி ஹிந்து 

பகுதி -4 பகுதி -3 பகுதி -2 பகுதி -1



பிறப்புச் சான்றிதழும், பட்ஜெட்டும் உள்ள தொடர்பு

பிறப்புச் சான்றிதழுக்கும், பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து 'தோழமை'- குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறியதாவது:

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தை எந்த நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்துக்காகவும், குழந்தை ஆணா, பெண்ணா, பிறந்த தேதி என்ன என்பதைக் கண்டறிவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், பிறப்புச் சான்றிதழ் வைத்து மத்திய அரசின் பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதியை ஒதுக்க முடியும்.

தற்போது பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதி குறைந்த சதவீதமே ஒதுக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டில் 17% மட்டுமே குழந்தைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி கூட இவ்வளவு குழந்தைகள் இந்தியாவில் இருப்பார்கள் என பொதுவாகக் கணக்கிட்டே ஒதுக்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் முக்கிய ஆவணம். அரசுப் பதிவேட்டின் படி பிறப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு குழந்தைகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கலாம். இதனால் குழந்தையின் பிறந்த நாள் முதல் ஒரு மாதக் குழந்தை, ஒரு வருடக் குழந்தை என சரியான புள்ளிவிவரம் கிடைக்கும். இதை வைத்தே குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்புக்கு நிதி ஒதுக்கலாம்.

ஆனால், நம் நாட்டில் 48% மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வாங்குகிறார்கள். எனவே, பிறப்புச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வும் அவசர அவசியம் என்கிறார் தோழமை தேவநேயன்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைக்கான செலவு பட்ஜெட்டில் 2014-15-ல் ரூ.16,415 கோடியாக இருந்தது, 2015-16ல் ரூ.13,636 கோடியாகக் குறைந்தது. 2016-17 பட்ஜெட்டில் இதற்கு ரூ.15,873 கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2015 -16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 'கிரை' எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் என்ற பிரிவில், தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடு சதவீதம்:
* குழந்தைகள் கல்வி - 79 சதவீதம்* குழந்தைகள் மேம்பாடு - 15 சதவீதம்* குழந்தைகள் பாதுகாப்பு - 1.8 சதவீதம்* குழந்தைகள் ஆரோக்கியம் - 3.0 சதவீதம்


நன்றி : ஹிந்து - தமிழ் 

தொகுப்பு: பாபு நடேசன்